Pages

Jul 27, 2011

இக்பாலின் வரலாற்றுத் தத்துவம் பற்றிய ஒரு கருத்தாடல்

டாக்டர் சுக்ரி
அல்லாமா முஹம்மது இக்பால் பன்முக ஆளுமை படைத்தவர். அவர் ஒரு மகாகவி் தத்துவஞானி் சிந்தனையாளர்‌ ஆழமான நோக்குப் படைத்த – பகுப்பாய்வு உள்ளம் கொண்ட ஒரு சிந்தனையாளர். எனவே, சமூகம்- அதன் இயக்கம், மாற்றங்கள் என்பன அவரது ஆய்வின் களமாக விளங்கியமை வியப்புக்குரியதன்று. இந்த வகையிலேயே வரலாற்று விளக்கம், வரலாற்றுத் தத்துவம் ஆகியன அவரது சிந்தனையின் ஒரு முக்கிய துறையாக விளங்கியது.
இக்பாலுக்கு முன்னர் வாழ்ந்த, இஸ்லாமியப் பண்பாடும் நாகரிகமும் உன்னத நிலையிலிருந்த காலப் பிரிவைச் சார்ந்த முஸ்லிம் வரலாற்று அறிஞர்களின் பாரம்பர்யம் பற்றிய மிகத் தெளிவான அறிவும் பரிச்சயமும் அவரில் காணப்பட்டது.
வரலாறு என்பது ஆட்சியாளர்கள், அரண்மனை வாழ்வு, படையெடுப்புக்கள் பற்றிய ஒரு பதிவாக அன்றி, மக்கள் சமூகத்தின் செயற்பாடு, மாற்றங்கள் பற்றிய விளக்கமாக அமைதல் வேண்டும் என்ற கருத்தை முஸ்லிம் வரலாற்றறிஞர்கள் பலர் கொண்டிருந்தனர். ‘ஆட்சியாளர்கள் காலத்திற்குக் காலம் தோன்றி மறைவார்கள். ஆனால் சமூகங்கள் தொடர்ச்சியாக நிலைத்திருக்கும்’ என்ற வரலாற்று உண்மையை இக்பால் அவரது ‘பயாம் மஷ்ரிகில்’ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
‘’மாவீரன் அலெக்ஸான்டர் மறைந்தார்.
அவருடன் அவரது வாள், போர்க்கொடி,
அவர் வெற்றிகொண்ட நாடுகளிலிருந்து
பெற்ற வரிகள், முத்து, இரத்தினம்
அனைத்தும் மறைந்துவிட்டன.
ஆனால்-
சமூகங்கள் மன்னர்களை விட
நிலைத்திருக்கும் சக்தி படைத்தவை.
ஈரானிய மாமன்னன் ஜெம்ஷித்
இன்று இல்லை.
ஆனால் ஈரானிய சமூகம்
இன்றுவரை நிலைத்து நிற்கிறது”(1)
இக்பாலின் இந்த வரலாற்றுத் தத்துவம் மத்தியகால முஸ்லிம் வரலாற்றறிஞர் இப்னு மிஸ்கவையின் கருத்தோடு ஒத்துள்ளது. இப்னு மிஸ்கவை பின்வருமாறு கூறுகின்றார்:
“எங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமூகங்களின் நிகழ்வுகள், அவற்றோடு தொடர்புடைய சந்தர்ப்ப சூழ்நிலைகளை நான் படித்தபோதும், அச் சமூகத்தின் ஆட்சியாளர்கள், அவர்களது நகரங்கள், அதனைச் சுற்றி நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி நான் அறிந்தபோதும், ஒரு முக்கிய வரலாற்று உண்மை எனக்குப் புலனாகியது. ஏற்கனவே நடைபெற்ற நிகழ்வுகள் போன்றவை, அவற்றினை ஒத்தவை, மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன என்பதே இந்த உண்மையாகும்.”
இப்னு மிஸ்கவை இதன் காரணமாகவே அவரது வரலாற்று நூலை “இனங்களின் அனுபவங்களும் முயற்சிகளின் முடிவுகளும்” (தஜாரிபுல் உமம் வ அவாகிபுல் ஹிமம்) எனப் பெயரிட்டார். இனங்கள், சமூகங்களின் அனுபவங்களின் தொகுப்பே வரலாறாகும் என்ற கருத்தை இப்னு மிஸ்கவை கொண்டிருந்தார்.(2)
இப்னு மிஸ்கவையின் இந்த வரலாற்றுத் தத்துவத்தை ஒத்த கருத்தை இக்பால் அவரது ‘அஸ்ராரேகுதி’யில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
‘’உனக்கு வரலாறு என்றால்
என்ன என்பது தெரியுமா?
அல்லது உன்னைப் பற்றியாவது
உனக்குத் தெரியுமா?
அது ஒரு வெறும் கற்பனை- புராணக் கதை
என்று நீ எண்ணுகிறாயா?
இல்லை! அது உன்னைப் பற்றி
நீயே அறியத் துணைபுரிகின்றது.
உனது வாழ்வின் நோக்கத்தை தெளிவுபடுத்தி
உன் சாதனைகளுக்கான பாதையை
அமைத்துத் தருகின்றது.
அது வாளைப்போன்று
உன்னைக் கூர்மையாக்குகின்றது.
பின்னர் அது உன்னை
உலகத்துடன் போராடவைக்கின்றது.
அது நன்கு பயிற்றுவிக்கப்பட்ட
கண்களைப் போன்றது.
இறந்த காலத்தை வாசித்து
மீண்டும் அதனை சிருஷ்டித்து
உனக்கு முன்னால் அது சமர்ப்பிக்கிறது.
உன் கடந்த காலம் நிகழ்காலமாய் வெடித்து அதிலிருந்து உன் எதிர்காலம் உருவாகிறது. நித்திய வாழ்க்கை நீ வாழ விரும்பின்
உன் இறந்த காலத்தை
நிகழ் காலத்திலிருந்தும் எதிர்காலத்திலிருந்தும் துண்டித்து விடாதே!”(3)
‘’வரலாற்றை ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து அது மனித ஆத்மாவின் அசைவும் இயக்கமுமாகும். ஏனெனில், மனித ஆத்மாவிற்கு ஒரு குறிப்பிட்ட சூழல் இல்லை. முழு உலகமுமே அதன் சூழலாகும். எனவே வரலாற்றை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு, தேசத்திற்கு உரியதாகக் கொள்வது குறுகிய மனப்பான்மையாகும்” என இக்பால் கருதுகின்றார். எனவே இக்பாலின் கருத்துப்படி, வரலாறு அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அது அனைவருக்கும் போதனை செய்கின்றது. அது அனைவருக்கும் சொந்தமான ஒரு புதையலாகும். நாடுகளுக்கு இடையில் காணப்படும் எல்லைகள் என்பன வெறும் சடத்தோடு தொடர்புடையன.
ஆனால் ஆத்மாவுக்கோ அத்தகைய எல்லைகள் இல்லை. அது காலம், இடம் என்ற எல்லைகளுக்குக் கட்டுப்படாதது. எங்களால் காலத்தைத் துண்டு துண்டாக வெட்டி விடல் முடியாது. எங்களால் கடந்த காலத்தை நிகழ்காலத்திலிருந்து துண்டித்துவிட முடியாது. நாம் எமது வசதிக்காகவும், சௌகரியத்திற்காகவும் தொடர்ச்சியான காலத்தை (serial time) ஓர் உண்மையாக ஏற்றுக்கொண்டு, வருடங்கள், மாதங்கள், நாட்கள், மணித்தியாலங்கள், நிமிடங்கள், வினாடிகள் என உருவாக்கியுள்ளோம். ஆனால் காலம் என்பது இவ்வாறு பாகுபாடு செய்ய முடியாதது என இக்பால் கூறுகின்றார். இக்பால் காலத்தோடு தொடர்புடைய தனது இந்த வரலாற் றுத் தத்துவத்தை “தர்பே கலீம்’ என்னும் தனது கவிதை நூலில் பின்வருமாறு விளக்குகின்றார்:
‘’காலம் என்பது ஒன்று
வாழ்க்கை என்பது ஒன்று
பிரபஞ்சமும் ஒன்றே!
பழைமை, புதுமை என்ற பாகுபாடு
குறுகிய நோக்கின் விளைவு’
இக்பாலின் கருத்துப்படி, வாழ்வு என்பது தொடர்ச்சியான அசைவும், இயக்கமுமாகும். அது மனிதனுக்கு அவனது ஆற்றல்கள், திறமைகளை சோதித்துப் பார்த்து, அவனது பெறுமதியை வெளிப்படுத்து வதற்கான செயற்பாட்டுக் களமாக உள்ளது. இதனையே பின்வரும் குர்ஆனின் திருவசனம் குறிப்பதாக அவர் கருதுகின்றார்:(4)
‘’அன்றி, அவர்களுக்கு நினைவூட்டப்பட்டாலும் அவர்கள் (நினைவுகூர்ந்து) நல்லுணர்ச்சி பெறுவதில்லை”(37:13)
வரலாற்றை அசைவாக, இயக்கமாக நோக்கும் இக்பால் “இஸ்லாத்தில் மதச்சிந்தனையின் புனர்நிர்மாணம்“(Reconstruction of Religious Thought in Islam) என்னும் நூலில் பின்வருமாறு விளக்குகின்றார்:
‘’ஒவ்வொரு கணமும் படைப்பின், சிருஷ்டியின் இயக்கமுள்ள கணங்களாகும். ஒவ்வொரு கணமும் பொருட்கள் உயிர் பெறுகின்றன. பொருட்கள் இறக்கின்றன. ஒவ்வொரு கணமும் நாம் காணும் பிரபஞ்சம் ஒரு புதிய பிரபஞ்சமாகும். எனவே, எந்த ஒரு மனிதனும் உடல் ரீதியாகவோ உளரீதியாகவோ செயலற்று, அசைவற்று இயங்காது இருத்தல் முடியாது. அவன் இயங்கிக்கொண்டும் விழிப்புடனும் இருத்தல் வேண்டும். காலம் என்பது எந்த ஒரு தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் விசேட சலுகை வழங்குவதில்லை. படைப்பின் நுட்பத்தையும் மாற்றத்தையும் புரிந்துகொண்டவர் எதை, எப்படி, எப்பொழுது செய்தல் வேண்டும் என்பதை அறிவர். அவர்கள் காலத்தை தங்களது ஆதிக்கத்திற்கு உட்படுத்துவர். இந்த வகையில் செயல்படாதோர் காலத்தால் அடிமைப்படுத்தப்படுவர்.
அறிவைப் பெற்று வெற்றிகொள்வோரும் உள்ளனர். அறிவைப் பெறாது செயல்படுவோரும் உள்ளனர். பின்னையோர் பிறரால் அடிமைப்படுத்தப்படு வர். அவர்களுக்கு ஏற்படும் சோதனை பிறர் பாடம் படிப்பதற்கு ஓர் எச்சரிக்கையாக அமைகின்றது. இயற்கை விதிகள் பற்றிய அறிவுமட்டும் மனிதனுக்கு உண்மையைத் தெரிந்துகொள்ளத் துணைபுரியாது. மனிதனின் தார்மீக, ஆத்மீக அம்சங்களும் போஷித்து வளர்க்கப்படல் வேண்டும்.
இந்த வகையில் செயல்படாதபோது நாங்கள் உயிர் வாழும் இந்த உலகைப் பற்றிய எமது அறிவு சரியானதாக அமைய மாட்டாது. அப்போது நாங்கள் உருவாக்கிக்கொண்ட கருத்துக்கள், கோட்பாடுகள் என்பவை பக்குவ மடையாத உள்ளங்கள் உருவாக்கிக்கொண்ட ஆசைகளின் வெளிப்பாடாக அமைவதால் அவை இந்தப் பூமியை நோக்கி உடைந்து சிதறிவிடும். அப்போது மனிதனின் தோல்விகளைப் பதிவுசெய்துள்ள நூலுக்கு இன்னொரு துயர அத்தியாயம் இணைக்கப்படும். வரலாறு என்பது இது அல்லாத வேறு எதுவாக இருக்க முடியும்?” இவ்வாறு இக்பால் வினா எழுப்புகின்றார்.(5)
இஸ்லாமிய சிந்தனை, குறிப்பாக வரலாறு பற்றிய முஸ்லிம்களின் நோக்கு வரலாற்றை இயக்கமும் அசைவும் கொண்டதாக நோக்குகின்றது என இக்பால் குறிப்பிடுகின்றார்‌. இதனை அவர் பின்வருமாறு விளக்குகின்றார்:
‘’இஸ்லாமிய சிந்தனையின் அனைத்து அம்‌சங்களும் இயக்கமும் அசைவும் கொண்ட ஒரு பிரபஞ்சத்தை நோக்கியே குவிகின்றன. இதனை இப்னு மிஸ்கவையினதும், இப்னு கல்தூனினதும் வரலாற்று நோக்குகள் உறுதிப்படுத்துகின்றன.
குர்ஆன் வரலாற்றை அறிவின் மூன்றாவது மூலாதாரமாகக் கருதுகின்றது. வரலாற்றைக் குர்ஆன் “அய்யாமுல்லாஹ்- அல்லாஹ்வின் நாட்கள்” என அழைக்கின்றது.
‘’அல்லாஹ்வின் நாட்களை அவர்களுக்கு நினைவூட்டுவீராக……” (14:5)
சமூகங்களின் விதி ஒட்டுமொத்தமாகவே தீர்மானிக்கப்படுகின்றது என்பதுவும், சமூகங்கள் அவற்றின் தவறான செயல்களுக்கான தண்டனையை இங்கு, இப்பொழுதே அனுபவிக்கின்றன என்பதும் குர்ஆனின் முக்கிய போதனைகளுள் ஒன்றாகும்.(6)
‘’உங்களுக்கு (உஹதுப் போரில் தோல்வியுற்று) காயம் ஏற்பட்டதென்றால் அந்த ஜனங்களுக்கும் இதைப் போன்றே (பத்ரில் தோல்வியுற்றுக் காயம்) ஏற்பட்டுள்ளது. அந்த சோதனையான நாட்களை மனிதர்களுக்கிடையில் மாறி மாறி வரும்படி நாம் செய்கிறோம்” (3: 140)
குர்ஆனின் நோக்கில் ஒரு சமூகத்தில் செல்வந்தர்கள், வசதிபடைத்தோர் அதிகரிப்பதன் காரணமாகவும், சமூக அநீதிகள் காரணமாகவும், சமூகத்தில் தீமைகள் பரவி அதன் ஒழுக்க மாண்புகள், தார்மீகப் பண்புகள் சீரழிந்த நிலையில் அல்லாஹ்வின் தண்டனை அதனை வந்தடைகிறது.
‘’நாம் ஓர் ஊரை அழித்திட நாடினால் அதில் சுகமாக வாழ்வோரை ( நம் கட்டளைகளுக்கு அடிபணிந்து வரும்படி) நாம் ஏவுவோம். ஆனால் (இக்கட்டளைக்கு) மாறு செய்யத் தலைப்படுகின்றார்கள். அப்போது தண்டனைக்குரிய தீர்ப்பு அவ்வூரின் மீது விதிக்கப்படுகின்றது. ஆகவே அதனை நாம் அழித்து விடுகின்றோம்.” (17:16)
7:32 என்ற குர்ஆனின் திருவசனமானது மனித சமூகங்களின் வரலாற்றை உயிர் வாழும் ஒரு பொருளை நாம் அறிவியல் ரீதியாக அணுகி ஆராய்வது போன்று விளக்குதல் முடியும் என்ற உண்மையை உணர்த்துவதாக இக்பால் கருதுகின்றார். அதாவது ஓர் உயிருள்ள பொருளின் தோற்றத்திற்கு ஏற்கனவே உயிருள்ள ஒரு பொருள் காரணமாக அமைகின்றது. இது போன்றே மனித சமூகத்தைப் பொறுத்தளவிலும் ஒரு பரம்பரை முன்னைய பரம்பரையோடு தொடர்புள்ளது. இது வரலாறு பற்றிய ஒரு பெரும் உண்மையை உணர்த்துவதாக இக்பால் கருதுகின்றார். அதாவது வரலாறு என்பது தொடர்ச்சியான ஓர் இயக்கமாகும். இது வளர்ச்சியை நோக்கி முன்னேறிச் செல்கின்றது. அதனை கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எனப் பாகுபாடு செய்தல் முடியாது. காலத்தின் இயக்கத்தைப் பகுதிகளாக வகைப்படுத்தல் முடியாது. ஒரு விதை மரத்தில் மறைந்துள்ளது. இது போன்றே ஒரு குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தில் காணப்படும் சிறுவன், இளைஞன், முதியவன் என்ற படித்தரங்கள் அக்குழந்தையில் உள்ளார்ந்து அமைந்துள்ளன. குழந்தை, சிறுவன், வாலிபன், முதியவர் அனைத்தும் உயிர்ப் பொருளே. சமூகம், தேசம், மனித இனம் அனைத்தும் இதே நிலையில் உள்ளன.
1932ஆம் ஆண்டு இந்தியாவில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் செனட் சபையானது, இந்தியர்களுக்கு இந்திய வரலாறு மட்டுமே கற்பிக்கப்படல் வேண்டும் எனவும், இஸ்லாமிய வரலாறு நீக்கப்படல் வேண்டும் எனவும் ஒரு பிரேரணை கொண்டுவரும் முயற்சியை மேற் கொண்டது. அக்காலப் பிரிவில் பல்கலைக் கழகத்தின் அனைத்துத் துறைகளிலும் செல்வாக்குச் செலுத்திய ஹி்ந்துக்களின் தீவிர அழுத்தம் காரணமாக அப்போது பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் புரூஸ் இப்பிரேரணையைக் கொண்டுவரத் திட்டமிட்டார்.
இதற்கு எதிராக 1932 ஜூன் 11ஆம் திகதி லாகூரில் முஸ்லிம்கள் ஓர் எதிர்ப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்தனர். இக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரை நிகழ்த்திய இக்பால், வரலாறு பற்றிய தனது விரிந்த விசாலமான நோக்கைப் பின்வரும் வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்:
‘’வரலாற்றை அதன் முழுமைத்துவ நோக்கில் நாம் அணுகினால் அதனை மனித ஆத்மாவின் இயக்கமாக நாம் காணமுடியும். மனித ஆத்மாவிற்கு ஒரு குறிப்பிட்ட சூழல் என்பது இல்லை. அது ஒரு குறிப்பிட்ட பௌதீக சூழலுக்குக் கட்டுப்பட்டதன்று. முழு உலகமும் அதன் சூழலாக உள்ளது. வரலாறும் இது போன்றதே. அதனை ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு உரித்தானதாகக் கொள்ள முடியாது. அது முழு மனித இனத்திற்கும் சொந்தமானது.”
இக்பால் குர்ஆனில் வரலாற்றுத் தத்துவத்தின் மூல வித்துக்கள் காணப்படுவதாக மிக உறுதியாக விசுவாசித்தார். இப்னு கல்தூனின் வரலாற்றுப் பெருநூலான ‘’முகத்திமா”விற்கான தூண்டுதலை குர்ஆனிலிருந்தே அவர் பெற்றுக்கொண்டதாகவும் இக்பால் கருதுகின்றார்.(7)
பொதுவாக அனைத்து முஸ்லிம் வரலாற்றாசிரியர்களும், பெரும்பான்மையான கீழைத்தேயவாதிகளும் இஸ்லாமிய வரலாற் றுத் தத்துவத்தின் ஆரம்பம், வளர்ச்சிக்கான மூலத்‌ தூண்டுதலாகக் குர்ஆனையே காண்கின்றனர். இக்பால் இக்கருத்தை மிக அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அல்குர்ஆன், ஒருவன் ஒரு விடயத்தை அல்லது செய்தியைக் கேள்வியுற்றால் அதன் உண்மையை, ஆதாரபூர்வமான தன்மையை உறுதிப்படுத்துதல் வேண்டும் எனக் குறிப்பிடுகிறது:
‘’விசுவாசிகளே! தீயவன் ஒருவன் உங்களிடம் ஏதேனும் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால் அதன் உண்மை நிலையை நன்கு விசாரித்து தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.” (49:6)
இது தொடர்பாக இக்பால் பின்வருமாறு விளக்குகின்றார்: ‘’வரலாறு அறிவியற் பண்பைப் பெறுவதற்கு, வரலாற்றின் உள்ளடக்கத்துடன் தொடர்புடைய உண்மைகள் ஆதாரபூர்வமாக அமைதல் மிக அவசியமாகும். இந்தவகையில், ஆதாரபூர்வமான தன்மை அவற்றை அறிவிப்போரி லேயே தங்கியுள்ளது. வரலாற்று விமர்சனத்தில் முதலாவது அடிப்படையாக அமைவது அறிவிப்பா ளரின் நம்பகத்தன்மை, குணநலன்கள் போன்றவையாகும். இதனை வைத்தே அவரது அறிவிப்பின் ஆதாரபூர்வமான தன்மை தீர்மானிக்கப்படுகின்றது.”
இக்பாலின் வரலாற்று நோக்கு எந்த வகையில் குர்ஆனியக் கோட்பாடுகளின் செல்வாக்கினால் உருவாகியது என்பதையும் குர்ஆன் அவரது ஆளுமையிலும் சிந்தனையிலும் செலுத்திய தாக்கத் தினையும் 1929ஆம் ஆண்டு அலிகார் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய பின்வரும் உரை மிகச் சிறப்பாகப் பிரதிபலிக்கின்றது:
‘’நான் வலியுறுத்த விரும்பும் இன்னொரு முக்கிய அம்சமாவது கடந்த காலத்தைப் பற்றிய அறிவைப் பெறுவது பற்றியதாகும். நான் கடந்த காலத்தை மட்டும் நேசிக்கும் பிரிவினர்களைச் சார்ந்தவனல்லன். நான் எதிர்காலத்தில் நம்பிக்கையுள்ளவன். எதிர்காலத்தை விளங்குவதற்கு எனக்கு நிகழ்காலம் அவசியப்படுகின்றது. இன்றைய இஸ்லாமிய உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகளைச்‌ சரியான முறையில் கிரகித்து விளங்குவதற்காக, எமது நாகரித்தினதும் பண்பாட்டினதும் மூல ஊற்று பற்றிய தெளிவான அறிவைப் பெறுதல் இன்றைய காலகட்டத்தின் தேவையாகும்.
இந்தக் காரணம் பற்றியே நான் உங்களைக் கடந்த காலத்தைப் பற்றிய அறிவைப் பெறும்படி வலியுறுத்துகின்றேன். நவீன பண்பாட்டினதும் நாகரிகத்தினதும் அடிப்படைகள் பற்றிய அறிவையும் பரிச்சயத்தையும் நாம் பெற்றிராததால் நவீன அறிவைத் தேடிப் பெறுவதில் பிற இனங்களை விட நாங்கள் பின்தங்கியுள்ளோம். எனவே, எங்கள் கடந்த காலத்தை எதிர்காலத்துடன் இணைப்பதைத் துண்டித்த அம்சங்கள் பற்றி நீங்கள் கவனம் செலுத்துதல் வேண்டும். இவ்வாறு துண்டிக்கப்பட்ட ஒரு முக்கிய அம்சமே நவீன அறிவியலில் கையாளப்படும் ‘தொகுத்தறிவு முறைமையாகும்’ இந்த விசாரணை முறை குர்ஆன் மனித இனத்திற்கு வழங்கிய பேரருளாகும். இந்த தொகுத்தறிவு முறையின் பலன்கள், விளைவுகள் இன்று மிகத் தெளிவாக உள்ளன. நான் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாகக் குர்ஆனை மிக உன்னிப்பாகப் படித்து வந்துள்ளேன். அதன் திருவசனங்களை நாள்தோறும் ஓதுகின்றேன்.
ஆனால் அதில் சில அத்தியாயங்களையாவது நான் உரிய முறையில் விளங்கினேன் என என்னால் கூறமுடியாது. இன்ஷா அல்லாஹ், இறைவன் எனக்குப் போதிய நேரத்தையும் சக்தியையும் தந்தால், நான் குர்ஆன் வகுத்தளித்த ஆய்வின் அடிப்படைகளை விருத்தி செய்து நவீன உலகம் எவ்வாறு இன்றைய வளர்ச்சி நிலையை அடைந்தது என்பது பற்றி விளக்குவதற்கு ஒரு விரிவான நூலை எழுதுவேன். குர்ஆனை ஆழமாகக் கற்பதற்கு தங்களை அர்ப்பணிக்கும் ஒரு பிரிவினரை இந்தப் பல்கலைக் கழகம் உருவாக்கும் என நம்புகிறேன்.”
அடிக்குறிப்புகள்:
1. Payam Mashriq.
2. S. Margolioth, Lectures on Arab Historians. Oxford. 1946, p11
3. Asrare- Khudhi.
4. Darbe Khudhi
5.The Reconstruction of Religions Thought in Islam , Lahor, 1952,p138
6. Idib 21
7. Idib 135.
drshukri.net

OurUmmah.org


0 comments:

Post a Comment

Blogger Themes

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More