இஸ்லாமிய போதனை மக்கா மண்ணில் ஆரம்பிக்கப்பட்ட வேளை அரேபியாமட்டுமன்றி அகில உலகுமே அறியாமை இருளில் மூழ்கியிருந்தது. இஸ்லாம் எனும் அறிவுத் தீபத்தை ஏற்ற வந்த அன்னல் நபி உம்மி (எழுத வாசிக்கத் தெரியாத) தூதராவார்.(1) அவர் இந்தத் தூதை எடுத்துச் சொன்ன சமூகம் (எழுத வாசிக்கத் தெரியாத) உம்மி சமூகமாகும் என்பதைக் குர்ஆன் குறிப்பிடுகிறது. (2) வரலாற்று ஏடுகள் அக்காலத்தை ‘ஜாஹிலிய்யக்காலம்’ என அடையாளப் படுத்துகின்றன. நபி(ஸல்) அவர்களது 23 வருடகால கடின முயற்சியின் பின்னர் அரேபியர்களிடையே கலாசார பண்பாட்டு ரீதீயான முன்னேற்றம் ஏற்பட்டது போல் மிகப் பெரிய அளவில் அறிவியல் பேரெழுச்சியும் ஏற்பட்டது. அரேபிய தீபகற்பத்தையும் தாண்டி ஐரோப்பிய உலகுக்கும் அறிவொளிகளை வழங்கும் அளவிற்கு மகத்தானதொரு மாற்றம் நிகழ்ந்தது. இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் காழ்ப்புணர்வு கொண்டவர்களால் கூட புறக்கணித்து விட முடியாத அளவுக்கு அறிவியல் எழுச்சியின் உச்சத்தை அடைய அந்த சாதாரண ஆட்டுமந்தை மேய்த்தவர்களைத் தூண்டியது எது? இந்த திடீர் திருப்பத்திற்கான காரணங்கள் என்ன? அறிவியல் துறையில் முஸ்லிம்கள் நிகழ்த்திய சாதனைகள்? அதற்குச் சாதகமாக இருந்த காரணிகள், இன்றைய காலகட்டத்தில் இத்துறை முஸ்லிம்களுக்கு மத்தியில் வீழ்ச்சி அடைந்தற்கான காரணங்கள் என்பனவற்றை இங்கு நோக்குவோம்.
முஸ்லிம்களின் அறிவியல் எழுச்சி:
கி.பி. 500ம் ஆண்டு முதல் 1500ம் ஆண்டுவரையுள்ள காலம் மத்தியகாலம் என வரலாற்றில் அழைக்கப்படுகிறது. இருண்ட காலம் என்றும் வர்ணிக்கப்படும் இக்காலப் பிரிவில் ஐரோப்பிய நாடுகள் கூட கலை, கல்வி, கலாசார ரீதீயில் பெரிய வீழ்ச்சியைக் கண்டிருந்தன. இதே வேளை கிறிஸ்தவ உலகு அறிவியல் துறைக்கெதிரான அறிவிக்கப்படாத யுத்தத்தையே தொடங்கியிருந்தது.
கி.பி. 283ல் எகிப்திய ஆட்சிப்பீடத்திலேறிய இரண்டாம் தொலமி அலெக்சாந்திரியாவில் நிறுவிய பிரமாண்டமான நூல் நிலையத்தை தியோபிளஸ் எனும் பாதிரியின் தூண்டுதலால் கி.பி. 391ல் கிறிஸ்தவர்கள் தீயிட்டுக் கொழுத்தினர். அறிவியலை மதத்தின் பெயரால் எதிர்த்தவர்கள் அறிஞர்களையும் விட்டுவைக்கவில்லை. ‘இயேசு கிறிஸ்துவுக்குப்பின் எந்த விஞ்ஞானத்துக்கும் இடமில்லை, அவருடைய போதனைகளுக்குப் பின் எந்தவிதமான விஞ்ஞானப் போதனைகளும் தேவையில்லை. (3) என்று போதிக்கப்பட்டதால் விஞ்ஞானிகள் பலர் மதப்பிரிவினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இவ்வாறு அறிவியலுக்கெதிரான போராட்டம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கையில் முஸ்லிம் உலகு அறிவுத்தாகம் கொண்டு, அறிவியலில் மோகம் கொண்டு பண்டைய அறிவியல் செல்வங்களைத் தேடி வந்து பெற்று அவற்றை மேலும் மெருகூட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தது.
மேற்குறித்த நிலை பற்றி பிரபல வரலாற்றாசிரியரான H.G.Wells தனது நூலில், ‘முதல் முதலில் கிரேக்கரே தத்துவ விசாரணையை ஆரம்பித்தனர். அவர்களுக்குப் பின்னர் அரேபியர் அம் முறையைத் தொடர்ந்தனர். அரிஸ்டோடில் விதைத்த தத்துவம், அலெக்ஸாந்திரியாவில் புகழ்பெற்ற நூதனசாலையில் கவனிப்பாரற்றுக் கிடந்தது. இவை அரேபியரின் எழுச்சிக்குப் பின்னரே முளைவிட்டு பழம் தரத் துவங்கின(4) என்று குறிப்பிடுகின்றார்.
அழிவின் விளிம்பிலிருந்த அறிவியலை முஸ்லிம்கள் பாதுகாத்திருக்காவிட்டால் பழம் பெரும் அறிவியல் முதுசங்கள் பல இன்றை உலகுக்குக்கிடைக்காது போயிருக்கலாம். அழிவிலிருந்து அறிவியலைப் பாதுகாத்தமை முஸ்லிம்கள் அறிவியல் உலகுக்குச் செய்த மிகப் பெரும் சேவையாகும். இது குறித்து பேராசிரியர் Stanislas Guyand அவர்கள் தனது Encyceopadie des science religieusus என்ற ஜேர்மனிய நூலில்,
‘மத்தியகால வரலாறுகளிலேயே இஸ்லாத்தின் வரலாறு நாகரிகத்தின் வரலாறாகவே விளங்குகிறது. புறக்கனிக்கப்பட்ட கிரேக்க விஞ்ஞானத்தையும் தத்துவ சாத்திரங்களையும் அழிவிலிருந்து பாதுகாத்து, மேற்குலகை எழுச்சிபெறச் செய்து அறிவியக்க வளர்ச்சிக்குக் காரணகர்த்தாக்களாக இருந்ததற்காக நாம் முஸ்லிம்களுக்கு மிகவும் கடமைப்படடுள்ளோம். ஏழாம் நூற்றாண்டில் பழைய உலகம் மரண வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தபோது அரேபியர்கள் பெற்ற வெற்றி இந்த உலகில் புதிய குருதியைப் பாச்சியது.’ என்று குறிப்பிடுவது மிகைப்படுத்தப்பட்டதொரு கூற்றல்ல.இதே கருத்தை C.E. Storss என்ற அறிஞர் Many Greeds -One cross என்ற நூலில்,
‘இருள் அடைந்திருந்த யுகத்தில் விஞ்ஞானம், தத்துவம் போன்ற ஒளிச்சுடர்களை உயரப்பிடித்திருந்த பெருமை அரேபிய முஸ்லிம்களையே சாரும். அவர்களே அரிஸ்டோட்டில், பிளேட்டோ, இயுக்லித் தொலமி ஆகியோரின் நூல்களை அறபு மொழியில்பெயர்த்து பாதுகாத்தனர். அவர்களாலேயே இந்நூல்களை மறுமலர்ச்சிக்காலத்தில் ஐரோப்பியரும் தத்தம் மொழிகளில் பெற்றுக்கொள்ள முடிந்தது’என்று குறிப்பிடுகின்றார்.
அன்று அரேபியர் ஏற்படுத்திய அறிவியல் எழுச்சிதான் இன்றைய ஐரோப்பாவின் அறிவியல் தொழிநுட்ப முன்னேற்றத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது என்பதை மேற்படி கூற்றுக்கள் உறுதி செய்கின்றன. அன்றைய அவர்களது அறிவியல் தாக்கம் இன்றுவரை வியாபித்துள்ளததைக் காணலாம். இதனைப் பின்வரும் கூற்று உறுதிப்படுத்துகின்றது.
‘ஐரோப்பாவில் லௌகீகத் துறையிலும் ஆன்மீகத் துறையிலும், அறியாமை இருள் சூழ்ந்திருந்தபோது ஸ்பெயின் முஸ்லிம்கள் சிறப்பு வாய்ந்த நாகரிகத்தையும் ஸ்தீரமான பொருளாதார வாழ்க்கையையும் அமைத்திருந்தார்கள். கலை, விஞ்ஞானம், தத்துவம், கவிதை முதலிய துறைகளின் வளர்ச்சியில் முஸ்லிம் ஸ்பெயின் பெரும் பங்கெடுத்தது. அவர்களின் கருத்துக்களின் செல்வாக்கு 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த தோமஸ் அக்யனாஸ், தாந்தே போன்ற தத்துவ ஞானிகளின் சிந்தனைகளையும் தாக்கத் தவறவில்லை. முஸ்லிம் ஸ்பெயின் ஐரோப்பாவின் ஒளிவிளக்கைப் போல விளங்கியது. (5)
இக்கூற்று அன்றைய அவர்களது அறிவியல் எழுச்சியின் தாக்கம் நீண்ட நெடிய வரலாறுடையது என்பதையும் ஐரோப்பாவின் மறுமலர்ச்சித் தொட்டிலாக திகழ்ந்தது ஸ்பெயினே என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.
இறுதியாகவும் ஒட்டுமொத்தமாகவும் முஸ்லிம்கள் அறிவியல் துறைக்காற்றிய பங்குபற்றிக் கூறுவதாயின், பேராசிரியர் பிலிப் கே. ஹிட்டி History of Arabs எனும் தனது நூலில் கூறுவது போன்று ‘மத்திய கால ஆரம்பத்தில் மனித இனத்தின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றியவர்கள் அரேபியர்களைப் போல வேறு எவரும் இல்லை’ என்று கூறலாம்.
அறிவியல் துறையில் இவ்வாறு எழுச்சி பெற்ற முஸ்லிம்கள் அத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு என்ன என்பதையும் ஓரளவு விரிவாக விளங்கிக்கொள்வது மேற்குறித்த கூற்றுக்களின் உன்னதத் தன்மையை உணர்ந்து கொள்ள வழிவகுக்கும். இவ்வகையில் முஸ்லிம்களின் அறிவியல்துறை சாதணைகள் பற்றி இங்கு நோக்கப்படுகிறது.
மருத்துவம்:
முஸ்லிம்கள் வளர்த்த அறிவியல் துறையில் மக்கள் வாழ்வுடன் மிக நெருங்கிய தொடர்புடைய மருத்துவம் முதன்மையானதாகும். கலீபா மாமூனின் காலத்தில் (மரணம் 833) தோற்றுவிக்கப்பட்ட பைத்துல் ஹிக்மா எனும் அறிவகத்தால் கிரேக்க மருத்துவ நூற்கள் சிரிய, அரேபிய மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டன. கிரேக்க அறிஞர்களான கலன், ஹிபோகிரட்ஸ் போன்றோரின் நூற்கள் ஜிர்ஜிஸ் பின் ஜிப்ரீல் இப்னு பக்ரிசு (மரணம் 771), யுஹன்னா இப்னு மஸாவேஹ் (மரணம்857), அலி அத்தஹு, பரினைன் இப்னு இஸ்ஹாக் (மரணம் 877) ஈஸா இப்னு யஹ்யா, தாபித் இப்னு குற்றா(மரணம் 901) போன்ற அறிஞர்களால் மொழிமாற்றம் செய்யப்பட்டன. இதன் மூலம் கிரேக்க மருத்துவ அறிவியல் பாதுகாக்கப்பட்டது. இதற்கு உதாரணமாக உடற்கூறு பற்றி கலன் எழுதிய ஏழு நூல்களைக் குறிப்பிடலாம். கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இந்த நூற்கள் கால வெள்ளத்தால் அழிந்து போயின. எனினும், அறபு மொழிக்கு மாற்றம் செய்யப்பட்ட மொழி பெயர்ப்புக்கள் மூலமாகவே இந்நூல் பற்றி இன்று அறிய முடிகின்றது. இது மொழிபெயர்ப்புக்கள் மூலம் கிரேக்க அறிவியல் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கின்றது.
முஸ்லிம்கள் வெறும் மொழிபெயர்ப்பாளர்களாக மட்டுமன்றி சொந்த ஆய்வுகளையும் இத்துறையில் வெளியிட்டனர். இவ்வகையில் அலி அத்தபரி எழுதிய ஷபிர்தவ்ஸ் அல்ஹிக்மா’ எனும் நூல் குறிப்பிடத்தக்கது. இன்று கிடைக்கும் மிகப்பழைய அறபு மருத்துவ நூற்களில் இதுவும் ஒன்றாகும். பிரபல மொழிபெயர்ப்பாளாரான ஹுனைன் இப்னு இஸ்ஹாக் என்பவரும் ஷகிதாப் அல் மஸாஇல் பில் ஜன்’ எனும் கண் மருத்துவம் பற்றிய நூலை எழுதினார். கண் நோய் பற்றி இன்று கிடைக்கும் அறபு மொழியிலான மிகப்பழைய நூல் இவரது நூலே என்பர். தாபித் இப்னு குர்ராவும் ஷஅல்ழாஹிரா பீ இல்மித்திப்’ என்ற மருத்துவ நூலை எழுதினார். இவரது மருத்துவ நூல் 31 பிரிவுகளாக அண்மையில் எகிப்தில் வெளியிடப்பட்டது. (6)
கிரேக்கர்களின் யூனானி மருத்துவ முறையை இன்றைய உலகுக்கு அளித்த பெருமை முஸ்லிம்களையே சாரும் என்பதை அனைவரும் அறிவர். ஆனால், அதுமட்டுமன்றி மேலைநாட்டு மருத்துவத்தின் தந்தையாகவும் முஸ்லிம்கள் திகழ்ந்தார்கள் என்பது பலரும் அறியாததாகும். மேலைநாட்டு மருத்துவத்தில் முஸ்லிம் மருத்துவ அறிஞர்கள் பலர் செல்வாக்கு செலுத்துகின்றனர். இவர்களுள்,
* அல்ஹாவி, அல் ஜுதரி, வல்ஹஸ்பா, கிதாபுத் திப்பி அல் மன்சூரி போன்றே நூல்களைத் தந்த அர்ராஸி(865-925). இவரது அல் ஹாவி என்ற நூல் ஷ17ம் நூற்றாண்டில் ஐரோப்பிய மருத்துவக் கல்லூரிகளில் பாடநூலாகப் பயன்படுத்தப்பட்டது என J.D. Bernal தனது Sciecnec is History என்ற நூலில் குறிப்பிடுகிறார். (7)
* மருத்துவ உலகின் பைபிள்(8) என்று போற்றப்படும் ஷகானூன்பித்திப்பி’ எனும் அதிகமான மக்களால் வாசிக்கப்பட்ட(9) மருத்துவ நூலைத் தந்த அலி இப்னுஸீனா(980 -1037) போன்ற பலரைக் குறிப்பிடலாம்.
இங்கு முஸ்லிம்கள் அறிவியல் உலகுக்குச் செய்த பணிகளைக் கூறுவது நோக்கமல்ல. அது ஆய்வுப் பணியின் பரப்பை விரிவாக்கிச் செல்லும். ஒட்டுமொத்தமாக முஸ்லிம் மருத்துவர்கள் மருத்துவத் துறைக்கு ஆற்றிய பங்கைத்தெளிபடுத்த பிரபல ஆங்கில நாட்டு வரலாற்றாசிரியர் H.G. Wells தனது The Out Line of History என்ற நூலில் குறிப்பிடும் பின்வரும் கூற்று போதுமானது.
‘மருத்துவத்துறையில் அவர்கள் மிகப்பெரும் அபிவிருத்தியை ஏற்படுத்தினார்கள். அவர்களின் மருத்துவ நூல் இன்றைய மருத்துவ நூலைப்போன்றே இருந்தது. அவர்களின் சிகிச்சை முறைகைள் பல இன்னும் எம்மிடையே உபயோகத்தில் இருக்கின்றன. அவர்களின் அறுவை மருத்துவர் மயக்க மருந்துகளின் உபயோகத்தைப் பற்றி அறிந்திருந்ததோடு, மிகச்சிக்கலான அறுவைச்சிகிச்சைகளையும் நிறைவேற்றினர். ஐரோப்பாவில் சமயச் சடங்குகளாலேயே நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று நம்பிச் செயலாற்றிய மதபீடத்தால் மருத்வத் தொழில் தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் அரேபியர்கள் உண்மையான மருத்துவ முறையைப் பின்பற்றினர்.’(10) இக்கூற்று முஸ்லிம் உலகு மருத்துவத்துறையில் அடைந்திருந்த முன்னேற்றத்தையும் அப்போதைய ஐரோப்பாவின் அறியாமையையும் எடுத்துக்காட்ட போதுமானது.
இரசாயனவியல்:
அறிவியல் துறையின் தலையாயதாகக் கருதப்படும் இரசாயனவியலைக் குறிக்கப் பயன்படும் கெமிஸ்ட்ரி (Chemistry) எனும் ஆங்கிலப் பதம் ஷகீமிய்யா’ எனும் அரபுச் சொல்லின் திரிபாக இருப்பது ஊடாக இத்துறைக்கு முஸ்லிம்கள் ஆற்றிய அளப்பரிய பங்கை ஊகிக்க முடிகிறது. எகிப்து நாட்டின் மண் கருமைத் தன்மையுடையதாக இருந்தது. இக்கலை அங்கு கண்டுபிடிக்கப் பட்டமையால் கீமிய்யா என்று பெயர் பெற்றது.
இக்கலையில் ஆய்வுகள் செய்த முஸ்லிம்கள் இரும்பை அதன் தாதிலிருந்து முகர்ந்து உணரவும், நிறக்கண்ணாடியைத் தயாரிக்கவும், தோல்களைப் பதனிடவும், மருந்து சாதனங்களைப் பெறவும், தாவரங்களிலிருந்து சாயங்களைப் பெறவும், வாசனைப் பொருட்களை உற்பத்தி செய்யவும் அறிந்திருந்தனர் என N. Glinka தனது General Chemistry என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
இத்துறைக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு பற்றி E.J. Holmyard குறிப்பிடுகையில், இரசாயனத்துறையில் பரிசோதனைகள் செய்து அவற்றின் மூலம் இரசாயனத் தன்மைகளை உறுதிப்படுத்துவது கீரேக்க நாட்டில் அறியப்படாமலேயே இருந்து வந்தது. ஆனால், விஞ்ஞானத்தில் பரிசோதனைகள் செய்து ஆராயும் முறை அக்கால முஸ்லிம் விஞ்ஞானிகளின் மகத்தான சாதனையாகும். இராசாயனத்துறையில் அரேபியர்கள் எத்தகைய ஆதிக்கம் செலுத்தினர் என்பதற்கு அறபு மூலத்திலிருந்து வந்த பல இரசாயனவியல் பதங்கள் இன்னும் சான்று பகர்கின்றன. எனக் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்கள் இத்துறையில் பல ஆய்வுகளைச் செய்து எரிகாரம் போன்ற பதார்த்தங்களைக் கண்டுபிடித்ததுடன் பல உத்திகளைக் கையாண்டு இதனை வளர்த்தனர். இத்துறையில் காலித் இப்னு யசீத், இப்னு ஹய்யான், ஜாபிர்; அலி இப்னு சீனா, அப்துல்லாஹ் அல் காஸாஸீ போன்ற பல அறிஞர்களும் ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர்.
முடிவாகக் கூறுவதாயின் ஹம்போல்ட் கூறுவது போல ‘தற்கால இரசாயனவியல் சந்தேகமின்றி முஸ்லிம்களின் கண்டுபிடிப்பேயாகும். இத்துறையில் அவர்கள் பெற்ற அடைபேறுகள் கவனத்தை ஈர்ப்பனவாக அமைந்திருந்தன’ (11) என்று குறிப்பிடலாம்.
வானவியல்:
முஸ்லிம்கள் பிரகாசித்த அறிவியல்துறைகளில் வானவியலும் ஒன்றாகும். இந்திய, கிரேக்க வானவியல் நூல்களை மொழிபெயர்த்து கற்றதோடு தமது ஆய்வுமுயற்சிகளையும் முஸ்லிம்கள் முடுக்கிவிட்டனர். மிகக்குறுகிய காலத்திலேயே முஸ்லிம் உலகில் பல வானியல் ஆய்வாளர்கள் உருவாகினர். அவர்கள் வானவியல்துறையில் அதுவரைகாலம் நிலவி வந்த தவறான கருத்துக்களை விமர்சிக்கவும் தயங்கவில்லை. கலீபாக்களின் உதவியுடன் பல்வேறு இடங்களில் வானவியல் ஆய்வு நிலையங்களும் நிறுவப்பட்டன.
முஹம்மத் அல் பஸாரி, யாகூப் இப்னு தாரிக், அல் குவாறிஸ்மி (780-850), அலி இப்னு ஈஸா, அல் பர்கானி, அல் மஹானி, பனூ மூஸா, அபூ மஃ’ர் போன்ற பல அறிஞர்கள் இத்துறையில் பல நூல்களையும் ஆய்வுகளையும் வெளியிட்டுள்ளனர்.
கணிதம்:
நாகரிகத்தின் கண்ணாடியாகவும், பிரயோக விஞ்ஞானத்தின் தாயாகவும் கருதப்பட்ட கணிதத்துறைக்கு முஸ்லிம்கள் பெரியளவில் பங்காற்றியுள்ளனர். கிரேக்கர்களின் கணிதத்தை எடுத்து அவற்றை மெருகூட்டி இன்றைய உலகுக்கு வழங்கியவர்கள் முஸ்லிம்களே. உரோம எண்களைப் போட்டுக் குழம்பிப்போயிருந்த மேற்குலகுக்கு 1, 2, 3 என்று அழைக்கப்படும் (English Numbers) எனத்தவறாகக் குறிப்பிடப்படும் இலக்கங்களை முஸ்லிம்களே அறிமுகப்படுத்தினர். ஸைபஃர் என்னும் பூஜ்யத்தை அறிமுகப் படுத்தியதன் மூலம் எண்முறை கணிதத்தை (Arithmetic) அறிமுகப்படுத்தியதும் முஸ்லிம்களே. பூஜ்யத்தைக் குறிக்கப்பயன்படும் Zero என்ற ஆங்கிலச் சொல் Sifr எனும் அரபுச் சொல்லின் திரிபாக இருப்பது இதனையே உணர்த்துகின்றது.
அல்ஜிப்றா எனும் பெயரால் அழைக்கப்படும் அட்சரகணிதத்தைக் கண்டுபிடித்தவர்களும் முஸ்லிம்களே. அதுமட்டுமன்றி திரிகோண கணிதம், தளக் கேத்திரகணிதம், பரப்புக்கேத்திரகணிதம் போன்றவற்றைக் கண்டுபிடித்தவர்களும் முஸ்லிம்களேயாவர்.
இத்துறைக்கு, குவாறிஸ்மி (780-850), அல்கிந்தி(803-873), தாபித் இப்னு குரா(826-901), அல் பத்தாஸீ(850-929), அபூ காமலில்(850-960), அபுல் வபா(940-998), இப்னு ஹைதம்(965-1039) போன்ற அறிஞர்கள் இத்துறையில் ஆய்வு நூல்களை வெளியிட்டனர்.
அடிக்குறிப்புக்கள்
1. அல் குர்ஆன் 7:157, 158
2. அல் குர்ஆன் 62:02
3. அபூபக்கர் ஏ.எம், அறிவியல் வளர்த்த முஸ்லிம்கள்,
முனீரா பப்ளிகேஷன்ஸ், காத்தான்குடி – 1980 பக்.04
4. மேலது, பக்.05
5. மேலது, பக்.06
6. M.I.M. அமீன் (கட்டுரை)
முஸ்லிம் உலகின் மருத்துவத்துறை பங்களிப்பு ஒரு வரலாற்று நோக்கு,
அல்ஷிபா -97
7. அபூபக்கர் ஏ.எம், மேலது பக்.32
8. மேலது, பக்.48
9. மேலது
10. மேலது பக்.28
11. M.A. Hanifa,
A Surrvery of Muslim Institution and Culture p.204