Pages

Aug 3, 2011

மகாத்மாவை அதிர வைத்த மாமனிதர்

தேசவிடுதலைக்காக போராடும் காஙிகிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர்.

அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர்.

லட்சக்கணக்கில் நிதி திரண்டுகொண்டிருந்த அந்நேரத்தில் பம்பாயின் மிகப் பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானி என்ற இஸ்லாமியர் காந்திஜியிடம் நேரில் சென்று, திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

காசோலையை கையில் வாங்கிய காந்திஜியின் கண்கள் அதில் நிரப்பப்பட்டிருந்த தொகையை வாசித்தபோது ஆச்சரியத்தால் விரிந்தது. காங்கிரஸ் கமிட்டியின் நிதி திரட்டும் திட்டத்தை ஒருவரே நிறைவேற்றித் தருகிறாரே என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், சுதந்திரப்போராட்ட நிதி என்பதால் அதில் பலரது பங்களிப்பும் இருந்தால்தான் அது சிறப்புடையதாக அமையும் என்று காந்திஜி கருதினார். எனவே அக்காசேரலையை உமர் சுப்ஹானியிடமே திருப்பிக் கொடுத்து, சில லட்சங்கள் மட்டும் வழங்குங்கள் என்கிறார். காந்திஜியின் விருப்பப்படி சில லட்சங்களை உமர் சுப்ஹானி வழங்கினார். ஒரு கோடி ரூபாயை திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்கு உமர் சுப்ஹானி வழங்க முன்வந்த செய்தி ஆங்கில அரசுக்கு எட்டுகிறது. பம்பாய் மாகாண வைஸ்ராய் உடனடியாக உமர் சுப்ஹானியின் தொழிலைமுடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார்.
உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் உற்பத்தியாகும் பஞ்சை அரசே விற்றுத்தரும் என்று நிர்ப்பந்தப்படுத்தி வாங்கி, மிகக் குறைந்த விலையில் விற்றது. இதனால் உமர் சுபஹானிக்கு ஏற்பட்ட நஷ்டம் மூன்று கோடியே அறுபத்து நான்கு லட்சம். இதனை அவரது சகோதரி பாத்திமா இஸ்மாயில் ஒரு பத்திரிகைப் பேட்டியில்குறிப்பட்டுள்ளார்.*

அந்நியத் துணி பகிஷ்கரிப்புப் போராட்டம் முனைப்புடன் நடந்து கொண்டிருந்த போது, "அந்நியத் துணிகளை உங்கள் பஞ்சாலைகளில் வைத்து எரியூட்டலாமா?'' - என்று காந்திஜி கேட்டார். அதற்கு "என் பஞ்சாலை இதைவிட வேறு ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படவாப் போகிறது'' - என்று உமர் சுப்ஹானி பதிலளித்திருக்கிறார்.
அந்நியத் துணிகளைத் தீயின் நாவுக்குத் தின்னக் கொடுக்கும் எழுச்சிமிக்க நிகழ்ச்சி காந்திஜி தலைமையில் உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைபெற்றது. ஆங்கில அரசால் தனது தொழிலுக்கு மேலும் இடைஞ்சல்கள் வரும் எனத்தெரிந்தும், தன் பஞ்சாலையை அந்நியத் துணிகளை எரியூட்டும் களமாக அமைத்துக்கொடுத்ததோடு, 30 ஆயிரம் மதிப்புள்ள அந்நியத் துணிகளையும் எரியூட்ட வழங்கினார். 1921 அக்டோபர் 9 - ஆம் தேதியும் அந்நியத் துணிகளை எரியூட்டும் மற்றொரு நிகழ்ச்சி உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைபெற்றது.
அந்நியத் துணி பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு களம் அமைத்துக் கொடுத்ததற்காக உமர் சுப்ஹானிக்கு பிரிட்டீஷ் அரசு கொடுத்த இன்னல்கள் ஏராளம்! தேச விடுதலைக்காக கொடுத்தும் இழந்தும் பொருளாதார தியாகங்களைச் செய்த உமர் சுப்ஹானியின் பெயரை இனியாவது இந்திய விடுதலை வரலாறு உச்சரிக்குமா?
(* நிஜாமுத்தீன் ஜமாலி, 'ஒரு துணி வியாபாரியின் கதை,' சிந்தனைச்சரம் நவம்பர் 1997., பக்கம்32-33.)


 Source:
http://nellaipopularfront.blogspot.com/2011/07/blog-post_7159.html

0 comments:

Post a Comment

Blogger Themes

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More