Pages

Aug 14, 2011

ஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்

கீழ்க்கோடி இந்தியரில் ஆயிரக்கணககான பேர்கள் தங்கள் சொத்துக்களை எல்லாம் இந்திய தேசிய ராணுவத்திற்குக் கொடுத்து விட்டு, கையில் தம்படிகூட இல்லதமல் ராணுவத்தில் குடும்ப சகிதமாகச் சேர்ந்து, தாய் நாட்டுக்காகப் பக்கிரிகளாக ஆனதை என் கண்களால் நானே பார்த்திருக்கிறேன்.* - INA கேப்டன் ஷா




நவாஸ்கான். ஸேவக் கி ஹிந்த்
1943 ஜுலை 2 - ஆம் தேதி சிங்கப்பூரில் 'ஆஸாத் ஹிந்த் சர்க்கார்' (Azad Hind Government) என்ற இந்திய தேசிய தற்காலச் சுதந்திர அரசை நிறுவிய நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், அவ்வரசின் நிர்வாக செலவிற்காகவும்: 'ஆசாத் ஹிந்த் பவுச்' என்ற இந்திய தேசிய ராணுவத்தை நடத்துவதற்காகவும் ரிஸர்வ் பேங்க் ஒன்றை நிறுவினார். அவ்வங்கிக்கான நிதியை சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற கீழை நாடுகளில் திரட்டினார்.

அவ்வாறு நிதி திரட்டும் கூட்டம் உன்றை பர்மாவின் தலைநகரான இரங்கூனில் கூட்டினார். கூடிஇருந்த அந்நகரத்து வியாபார பிரமுகர்களிடம் நேதாஜி பேசும்போது, "தேசவிடுதலைக்காகப் போராடும் நம் இநிதிய தேசிய ராணுவத்திற்கு அள்ளி வழங்குங்கள்'' - என்று வேண்டுகோள் விடுத்தார். வருகைதந்த வியாபாரப் பெருமக்கள் அனைவரும் ஒன்று கூடிப் பேசி, "எங்கள் வருமாணத்தில் 10 சதவிகிதத்தை இந்திய தேசிய ராணுவத்திற்கு தொடர்ந்து வழங்குகிறோம்'' என்று அறிவித்தனர்.

இவ்வறிவிப்பைக் கேட்ட நேதாஜி சற்று கோபத்துடன், தாய்நாட்டின் விடுதலைக்காக ரத்தம் சிந்தும் எங்கள் வீரர்கள் ஐந்து சதவிகிதம் 10 சதவிகிதம் என்று கணக்குப்பார்த்தா சிந்துகின்றனர்? நீங்கள் நிதி வழங்க பார்க்கின்றிர்களே ! - என்று பேச, கூட்டத்திலிரந்து தலையில் தொப்பி, தாடியுடன் முதியவர் ஒருவர் மேடையை நோக்கி வருகிறார். வந்தவர் நேதாஜியின் கையில் ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார். அதை வாங்கிப் படித்த நேதாஜியின் கண்களில் நீர் திரண்டு இமை வரப்புகளுக்குள் முட்டி மோதி நிற்கிறது. நேதாஜி உணர்ச்சி வசப்படும் வகையில் அக்காகிதத்தில் அப்படி என்ன தான் எழுதப்பட்டிருந்தது?

...இந்திய தேச பக்தர்கள் பலர் தங்களுடைய சொத்துக்களைச் சுதந்திர இந்திய அரசாங்கத்திற்கு அர்ப்பணம் செய்தனர்.ஸ்ரீஹபீப், ஸ்ரீகன்னா முதலிய பிரமுகர்கள் சுதந்திரப் போருக்கு உதவியாக லட்சக்கணக்கான தொகையை வாரி வழங்கினர். சில நாட்களில் இந்திய தேசிய வங்கியில் 25 கோடி ரூபாய்க்கு மேல் சேர்ந்துவிட்டது. -ஜெயமணி சுப்பிரமணியம்.*

"ரங்கூன் மாநகரில் எனக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வியாபார நிறுவனங்களை இந்திய தேசிய ராணுவத்திற்காக நான் எழுதி வைக்கிறேன்'' - என்ற கொடை வாசகங்கள் அக்காகிதத்தில் இடம் பெற்றருந்தன.

அவ்வாசகங்களை எழுதிய கரங்களுக்குச் சொந்தக்காரரான முகம்மது ஹபீப் என்ற அந்த முதியவரை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆரத்தழுவியவராக, இவர் தான் ஸேவக் கி ஹிந்த் (இந்தியாவின் சேவகர்) என்ற பெருமிதத்துடன் அறிவித்தார்.**

இவ்வாறு நேதாஜி படை நடத்துவதற்கான பொருளாதாரப் பிண்ணனியை உருவாக்கிக் கொடுத்தவர்களுள் பெரும்பாலோர் கீழை நாடுகளில் வாழ்ந்த முகம்மது ஹபீப் போன்ற முஸ்லிம் தனவந்தர்களாவர். (* ஜெயமணி சுப்பிரமணியம், நேதாஜியின் வீரப்போர் இரண்டாம் பாகம், பக்கம் 181) - (** கே. அருணாசலம், ஜெய்ஹிந்த், பக்கம் 86



நேதாஜியின் மாலைக்கு மூன்று லட்சம்
பிரிட்டீஷ் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட நேதாஜியின் 'இளமையின் கனவு', 'நேர்வழி' ஆகிய இரண்டு புத்தகங்களைப் படித்து தேசிய உணர்வால் தூண்டப்பட்டு தனது 21 வயதில் இந்திய தேசிய ராணுவத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் எம்.கே.எம்.அமீர் ஹம்சா. எண்பது வயது முதியவராக இன்று சென்னையில் வாழ்ந்து வரும் இத்தியாகச் செம்மல் பல லட்சங்களைத் துணிச்சலுடன் இந்திய தேசிய ராணுவத்திற்கு வாரி வழங்கியவராவார்.

பிரிட்டீஷாரால் நாடுகடத்தப்பட்ட வங்கத்தைச் சார்ந்த ராஷ்பிஹாரி போஸ் ஆரம்பித்த 'இந்திய சுதந்திர லீக்' அமைப்பில் தன்னை முதல் நபராகப் பதிவு செய்தார். பின்னர் நேதாஜிபுரட்சிப் படைக்குத் தலைமை ஏற்ற போது அதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியதற்காகப் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் விதித்த மரண தண்டனையிலிருந்து தப்பியவர்.

1943 - இல் நேதாஜி ரங்கூனுக்கு முதலில் சென்றபோது நடந்த விழாவில் அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளைப் போராட்ட நிதிக்காக ஏலம் விட்டனர்.அம்மாலைகளில் ஒன்றை மூன்று லட்சம் ரூபாக்கு ஏலத்தில் எடுத்தார்.

இந்திய தேசிய ராணுவத்தில் அமீர் ஹம்சா பணியாற்றியதைப் பாசத்தின் காரணமாக அவரது தந்தை விரும்பவில்லை. இரண்டு நாள் அவரை வீட்டில் பூட்டிவைத்துவிட்டார். இதனை அறிந்த நேதாஜி அமீரையும் அவரது தந்தையையும் அழைத்து வரச்செய்தார். நாடு சுதந்திரம் அடைய வேண்டிய அவசியத்தை உணர்ச்சிப் பொங்க எடுத்துரைத்தார். நேதாஜியின் உரையாடலைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட இவரது தந்தையார், தனது சட்டைப் பையிலிருந்த காசோலைப் புத்தகத்தை எடுத்து இரண்டு லட்சத்து முப்பதாயிரத்துக்கான ஒரு காசோலையை எழுதி நேதாஜியிடம் கொடுத்ததோடு தன் மகனையும் முழுமையாக நேதாஜியிடம் ஒப்படைத்தார்.

23-01-1944 - இல் நேதாஜின் 47 - வது பிறந்த நாளின் போது ஒரு லட்சத்துக்கான காசோலையை இவர் நேதாஜிடம் வழங்கியதோடு, தனது வைர மேததிரத்தை நேதாஜிக்கு பிறந்த நாள் பரிசாக அணிவித்தார். அமீர் ஹம்சாவுக்கும் அவரது தந்தையாருக்கும் நேதாஜி புத்தாடைகளை வழங்கி கௌரவித்தார்.*


23-01-1944 இல் நேதாஜியின் 47-வது பிறந்த நாள் விழா ரங்கூன் ஜுப்ளி அரங்கில் நடைபெற்றது. பர்மா வாழ் தமிழர்கள் நேதாஜிக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்தனர்.எதிர்பார்த்ததை விட மூன்று மடங்கு அதிகமாகத் தங்கமும் நகைகளும் குவிந்தன. - அமீர் ஹம்சா.

தனது செல்வத்தை எல்லாம் நேதாஜியின் சுதந்திரப் பணிக்கு வழங்கிவிட்டு, நேதாஜி தனக்கு வழங்கிய சட்டைத் துணியை இன்றளவும் பாதுகாத்தவராக, பழைய தியாக நாட்களை நினைவில் பசுமையுடன் ஏந்தியவராக இன்றும் சென்னையில் வாழ்ந்து வரும் இப்பெருமகனை, இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டில் யார் கௌரவித்தார்?


(* அமீர் ஹம்சா, 'நேதாஜியின் மாலைக்கு ரூ. 5 லட்சம்' , தினமணி சுதந்திர பொன் விழா மலர்,பக்கம் 69.)
 
 
Source:
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-நெல்லை

0 comments:

Post a Comment

Blogger Themes

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More